வல்வில் ஓரி விழா: அரசியல் கட்சிகள் விளம்பரத் தட்டிகள் வைக்க தடை

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் விளம்பரத் தட்டிகள், சுவர் விளம்பரங்கள் போன்றவை வெளியிடக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் விளம்பரத் தட்டிகள், சுவர் விளம்பரங்கள் போன்றவை வெளியிடக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி திறப்பு விழா ஆகியன வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளன.
 இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விழாவில், அரசுத் துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளையும் முழுமையாக செய்திட வேண்டும்.
 கொல்லிமலையில் நெகிழிப் பொருள்கள், பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொல்லிமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். துணியிலான அல்லது எளிதில் மக்கக்கூடிய பொருள்களால் ஆன பைகளை பயன்படுத்த வேண்டும். மேலும், வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் விளம்பரத் தட்டிகள், சுவர் விளம்பரங்கள் போன்றவை வெளியிடக் கூடாது. அரசு சார்பில் வைக்கப்படும் விளம்பரத் தட்டிகள் மற்றும் விளம்பரங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
 சமுதாய அமைப்புகள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு கோட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் உரிய முன் அனுமதி பெற்று, அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நேரத்துக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். அதற்கான பணிகளை அலுவலர்கள் கண்காணித்து பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
 அந்தந்த துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, விழாவினை மிகச்சிறப்பாக நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.மாலதி, மகளிர் திட்ட அலுவலர் வி.மணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி.பாலமுருகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com