பள்ளிபாளையம் அருகே நூற்பாலைத் தொழிலாளி கொலை

பள்ளிபாளையம் அருகே நூற்பாலைத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் சடலம் வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே நூற்பாலைத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் சடலம் வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் கூத்தம்பூண்டி மேட்டுபுதூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர். இவர், பள்ளிபாளையம் அருகே பாதரையில் தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.
 தனது உறவினருடன் கோவை மருதமலைக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை வேலைக்குச் சென்ற இவர், இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்தில் ஆலையில் பணியிலிருந்த சக தொழிலாளியான திருப்பதியைத் தொடர்பு கொண்டு, தான் விபத்தில் சிக்கிவிட்டதால் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிய இவர், உதவிக்கு வருமாறும் கேட்டுள்ளார்.
 இதனால், அதிர்ச்சியடைந்த திருப்பதி அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததோடு, உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளார். இந்நிலையில், ஆனங்கூரை அடுத்த நெட்டவேலாம்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ராமச்சந்திரன் சடலம் சிதைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது தெரியவந்தது.
 இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிதைந்த நிலையில் காணப்பட்ட ராமச்சந்திரனின் கழுத்து அறுபட்டிருந்ததோடு, உடலில் கத்திக்குத்துக் காயங்களும் காணப்பட்டன. சற்று தொலைவில் ராமச்சந்திரன் அணிந்திருந்த செருப்புகளும், ரத்தம் உறைந்தும் இருந்தது தெரியவந்தது.
 இவரை யாரேனும் கொலை செய்து தண்டவாளத்தில் போட்டிருக்கலாம் எனக் கருதிய ரயில்வே போலீஸார், இவ்வழக்கை பள்ளிபாளையம் காவல்துறையிடம் விசாரணைக்கு ஒப்படைத்தனர். சடலம் கிடந்த பகுதிக்கு மோப்பநாய் ஜூலி வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்து அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்தனர்.
 ஒருவருக்கும் மேற்பட்டோர் சேர்ந்து இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து, பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com