தமிழகத்தில் ஆட்சி கவிழும் நிலை மத்திய அரசால் வராது

தமிழகத்தில் ஆட்சி கவிழும் நிலை மத்திய அரசால் வராது என மத்திய சாலைப் போக்குவரத்து,

தமிழகத்தில் ஆட்சி கவிழும் நிலை மத்திய அரசால் வராது என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 நாமக்கல்லில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
 கடந்த 6 மாதங்களாக தமிழகத்துக்கு இக்கட்டான சூழ்நிலை நிலவி வருகிறது. இது எந்த நிலையிலும் நல்லதல்ல. மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிமுறை மாறுபட்ட நிலையில், மிகப்பெரிய முன்னேற்றம் அடைய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டு வரப்படுகிறது. இந்த நடைமுறையில் உள்ள சிறு பிரச்னைகளை பேசி நல்ல தீர்வு காணப்பட்டு வருகிறது.
 தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும்கட்சி உறுப்பினர்கள் பணம் பெற்றதற்கு சிடி ஆதாரம் உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அந்த நேரத்தில் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது ஏன்? நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக வெளிநடப்பு, கலவரம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மை தெரியவரும்.
 தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில்லா ஆட்சிக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக 4 அணிகள் பிரிந்துள்ளன. தலைமையற்ற நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, தமிழகத்தில் மத்திய அரசால் ஆட்சி கவிழும் நிலை வராது.
 தமிழகத்துக்கு நல்ல காலம் பிறந்து கொண்டிருக்கிறது. மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு நன்மைகள் கிடைக்கிறது என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது.
 நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றிபெறுவார். அதற்கு தமிழகம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு தரவேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் செயல் அவர்கள் பொதுநல நன்மையை விரும்பாதவர்கள் என்பதையே காட்டுகிறது என்றார்.
 பாஜக நாமக்கல் மாவட்டத் தலைவர் என்.பி.சத்திய மூர்த்தி, மாவட்டச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com