ரேஷன் அரிசி கடத்தல்: சரக்கு வாகன ஓட்டுநர் கைது

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை வியாழக்கிழமை மீட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸார் ஓட்டுநரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை வியாழக்கிழமை மீட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸார் ஓட்டுநரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள மோர்பாளையத்தில் இருந்து வையப்பமலை நோக்கி வியாழக்கிழமை காலை சரக்கு வாகனம் சென்றது. இந்த வாகனத்தை நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு கும்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்த இளவரசன் (24) ஓட்டிச் சென்றார்.
 இந்த வாகனம் கருங்கல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. பின்னர், அந்த சரக்கு வாகனத்தை நகர்த்த முடியாததால் ஓட்டுநர் இளவரசன், அங்கேயே வாகனத்தை விட்டுவிட்டுச் சென்று விட்டார்.
 அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்ததை அறிந்த அப் பகுதி பொதுமக்கள் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீஸார் 60 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்துடன் மீட்டனர்.
 இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் இளவரசனை கைது செய்து, நாமக்கல் 2ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித் துறை நடுவர் தமயந்தி, ஓட்டுநர் இளவரசனை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் வாங்கி கடத்திச் செல்வது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com