பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த 7 பேர் கைது: 50 சவரன் நகை, ரூ. 3. 10 லட்சம் பறிமுதல்

சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்கில் தொடர்புடைய கூட்டு கொள்ளையர்கள் 7 பேரை சிறப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்கில் தொடர்புடைய கூட்டு கொள்ளையர்கள் 7 பேரை சிறப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் 50 சவரன் நகைகள், ரொக்கம் ரூ. 3.10 லட்சம், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள வடுகம் பகுதியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் முத்துசாமி (75).  அவரும் அவரது மனைவி ஜெயலட்சுமியும் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று  இருவரையும் ஆயுதங்களால் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி21.5 சவரன் நகை, ரொக்கம் ரூ. 1.20 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடுத்துச் சென்றது. இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகள் குறித்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர.அருளரசு, காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்லமுத்து, உதவி ஆய்வாளர் மாதைய்யன் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைத்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் வேலூர் மாவட்டம், சைதாப்பேட்டை, ஆரோக்கிய மாதா கோயில் தெருவைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் மகன்களான சார்லஸ் என்ற மதிவாணன் (24),  நவீன் (23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இருவரிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், வடுகம் பகுதியில் முத்துசாமி என்பவர் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் தங்கள் கூட்டாளிகளான சேலம் சின்ன சீரகாபாடி கேசவன்,  ஒசூர் சானசந்திரம் ரவி, எடப்பாடி செல்வம், ஆட்டையாம்பட்டி பனங்காடு பிரபு, கன்னங்குறிச்சி மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து சேலம் மாவட்டம், கொளத்தூர் தார்காடு கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து முதியவரை கட்டிப்போட்டுவிட்டு 10 சவரன் நகை, வெள்ளி பொருள்கள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து சார்லஸ், நவீன் அளித்த தகவலின் பேரில், கூட்டாளிகள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைதான  ஏழு பேரும் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
மேலும் வேறு சிலருக்கும் இவர்களுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இவர்களிடம் இருந்து 50 சவரன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் ரூ. 3.10 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனம், மடிக்கணினி போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்பி., அருளரசு, இந்தக் குற்றவாளிகள் மீது சேலம் மாவட்டத்தில் 10 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் 3 வழக்குகள், ஈரோடு மாவட்டத்தில் 2 வழக்குகள் உள்ளன என்றார். பின்னர் இக்குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை பாராட்டினார். இவர்கள் அனைவரும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com