மினி ஆட்டோ மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்து: இருவர் காயம், சாலை மறியல் 

பரமத்திவேலூரை அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் அருகே முன்னால் சென்ற மினி ஆட்டோ மீது பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் காயம் அடைந்தனர்.

பரமத்திவேலூரை அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் அருகே முன்னால் சென்ற மினி ஆட்டோ மீது பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் காயம் அடைந்தனர். இதில் ஆத்திரமடைந்த அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 பரமத்தி வேலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று பிலிக்கல்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிலிக்கல்பாளையம் அருகே உள்ள வெள்ளத்தாரை அருகே சென்றபோது பின்னால் அதி வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று அந்த மினி ஆட்டோ மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மினி ஆட்டோ அருகில் உள்ள வீட்டின் கூரையில் இடித்து நின்றது.
 விபத்தில் சாணார்பாளையம், குடித்தெருவைச் சேர்ந்த மினி ஆட்டோ ஓட்டுநர் துரைசாமி (40), பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்த குமரன் (35) ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதையறிந்த அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் ஏற்ற வந்த டேங்கர் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி, பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. சுஜாதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
 இதில் தினசரி 100-க்கும் டேங்கர் லாரிகளில் இப் பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து அதி வேகமாக லாரிகளை ஓட்டி வருகின்றனர். இதனால் இப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக குறைந்து வருவதாகவும், இந்த தண்ணீர் டேங்கர் லாரிகளை இப் பகுதியில் இயக்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர்.
 அதன் அடிப்படையில் தண்ணீர் எடுக்க இப் பகுதிக்கு டேங்கர் லாரிகள் வர அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியதை அடுத்து அங்கிருந்து பேருந்து மற்றும் வாகனங்களை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com