ராமமோகன் ராவ் யாரையோ திருப்திப்படுத்த நினைக்கிறார் 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. யாரையோ திருப்திப்படுத்த தவறான தகவல்களை அவர் கூறுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 "கிராம் ஸ்வராஜ் அபியான்' என்ற பிரசாரத் திட்டத்தை மத்திய அரசு துவக்கி, வரும் மே 5-ஆம் தேதி வரை நடத்துகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள, 1,477 கிராமங்களில் உள்ள 8 லட்சம் குடும்பங்களுக்குக் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் எல்.இ.டி மின் விளக்குகள் மானிய விலையில் ரூ. 50-க்கு விற்கப்பட உள்ளன.
 மின்வாரியம், மத்திய அரசுடன் இணைந்து குறைந்த விலையில் எல்இடி மின் விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த மின்விளக்கு 100 வாட்ஸ் திறனுக்கான வெளிச்சத்தை 9 வாட்ஸில் தரும். இதன் வாயிலாக 80 சதவீதம் மின் சிக்கனம் ஏற்படுவதுடன் மக்களுக்கும் செலவு குறையும். கோடை காலத்தில் மின் தேவை 16,000 மெகா வாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் உள்ளது.
 டி.டி.வி தினகரனை எதிர்த்து ஓராண்டை பூர்த்தி செய்து நாங்கள் 2-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் தலைமைச் செயலாளராக இருந்தவர், எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார். யாரையோ திருப்திப்படுத்த தவறான தகவலை அவர் கூறுகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்ல நாங்கள் தடையாக இருந்ததாக அவர் கூறுவது தவறானது.
 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அப்போலோ மருத்துவமனையில் இருந்ததாக ராம மோகன்ராவ் கூறுவது தவறாகும். அப்போது நானும், அமைச்சர் சரோஜா, எம்பி பி.ஆர்.சுந்தரம் ஆகியோரும் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பட்டி கோயில் ஒன்றில் அவர் நலம் பெற யாகம் நடத்திக் கொண்டிருந்தோம். அமைச்சர் வேலுமணி திருவனந்தபுரத்தில் அரசு தொடர்பான நிகழ்ச்சியில் இருந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையை அவர் அப்போதே வெளியிட்டிருக்கலாம். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ராமமோகன் ராவ் இவ்வாறு கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பொறுத்தவரை கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோதே தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த ஆண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திருக்கும்.
 2011-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று 2013-ஆம் ஆண்டு நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வழிவகை செய்தார். ஆனால், அரசியல் ஆதாயம் தேடவே, திமுக இப்போது பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
 "நீரா' பானம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். அதேவேளையில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com