தொடர் போராட்டம்:  பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து 12 ஆசிரியர்கள் விடுவிப்பு

தொடர் போராட்டம் காரணமாக பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாகக் கூறி, இப்பணியில் இருந்து 12 ஆசிரியர்களை விடுவித்து

தொடர் போராட்டம் காரணமாக பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாகக் கூறி, இப்பணியில் இருந்து 12 ஆசிரியர்களை விடுவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி கடந்த 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. விடைத்தாள்கள் அனைத்தும் அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் துறையூர் சாலையில் உள்ள ரெட்டிபட்டி பாரதி கல்வி நிறுவனங்கள் வளாகத்திலும், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் அமைக்கப்பட்டு பணிகள் கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் விடைத்தாள் திருத்தும் பணியின்போது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் கொடுக்கப்படும் 20  விடைத்தாள்களில் 10 மட்டும் திருத்தினர்,  மீதியைத் திருத்தாமல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வந்தனர். 
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்கு பிறகு பணிக்குச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ரெட்டிபட்டி பாரதி கல்வி நிறுவனங்கள் வளாகத்துக்குச் சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. உஷா, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர்களிடம் பேசிய அவர்,  போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் திட்டமிட்ட காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வித்துறை விதிமுறைகளின்படி விடைத்தாள் திருத்த இயலாத ஆசிரியர்கள் இந்தப் பணியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
அப்போது 12 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து தாங்களே விடுவித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த 12 பேரையும் விடுவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.  விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், பணியாற்றி வரும் பள்ளிகளுக்குத் திரும்பினர்.
 திருச்செங்கோட்டில் உள்ள விடைத்தாள் மையத்தில் இத்தகையை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com