சுதந்திர தின விழா: ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை: ரூ.1.36 கோடி நலத் திட்ட உதவி அளிப்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 185 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
நாமக்கல் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக் கொண்டார். 
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அவர்களின் இருக்கைக்குச் சென்று ஆட்சியர் சால்வை அணிவித்து கெளரவித்தார்.   மேலும்,  பல்வேறு அரசுத் துறை மற்றும் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 
ஆதி திராவிடர் நலத் துறை,  மாற்றுத் திறனாளிகள் நலத் துறை,  முன்னாள் படைவீரர் நலத் துறை,  வருவாய்த் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரத்து 26 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து சுதந்திர தின விழா தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதில், நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட 9 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்
நடனமாடினர்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிகளுக்கு கேடயம், மாணவ,  மாணவியருக்கு பரிசு,  சான்றிதழ் வழங்கப்பட்டன. 
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு,  சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதி,  கூடுதல் எஸ்.பி. எஸ்.செந்தில்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சி. மாலதி,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com