சுற்றுலா தலமாக காட்சியளிக்கும் பரமத்தி வேலூர் காவிரி பாலம்

பரமத்தி வேலூர் காவிரி பாலத்தில் காவிரியில் வரும் வெள்ளநீரை பார்க்கக் கூடிய பொதுமக்களால் சுற்றுலா தலமாகக் காட்சியளித்தது. 

பரமத்தி வேலூர் காவிரி பாலத்தில் காவிரியில் வரும் வெள்ளநீரை பார்க்கக் கூடிய பொதுமக்களால் சுற்றுலா தலமாகக் காட்சியளித்தது. 
பொதுமக்களின் வருகையையொட்டி பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே தற்காலிகக் கடைகள் அமைத்து சிறு வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீர் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால், காவிரியில் இருந்து வரும் உபரிநீரை மேட்டூர் அணையில் முழுவதுமாகத் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பவானி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரும் காவிரியில் கலந்து வருகிறது. பரமத்திவேலூர் வட்டத்துக்கு உட்பட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ,துணி துவைக்கவோ,கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என எச்சரிக்கை பலகைகள்,ஒலி பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 
மேலும் காவிரி கரையோரம் மற்றும் காவிரி பாலம் ஆகிய பகுதிகளில் நின்று செல்பி எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. வெள்ளப் பெருக்கின் காரணமாக சோழசிராமணி கதவணையில் பாதுகாப்புக் கருதி கனரக வாகனங்கள் செல்லவும், ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு வரும்  2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி  நீரை காண்பதற்கு பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் பரமத்தி வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும், வாராணசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் காரை நிறுத்தி வெள்ள நீரைப் பார்த்தும், ரசித்தும் செல்லிடப்பேசியில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்தும் செல்கின்றனர். இதையறிந்த சிறு வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே ஆங்காங்கே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஏராளமான மக்கள் கூடி காவிரியில் வரும் வெள்ள நீரை குடும்பத்துடன் பார்த்து வருவதால் காவிரி பாலம் சுற்றுலா தலம் போன்று காட்சியளித்து வருகிறது. காவல் துறையினர்,வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப் பணித் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com