பெண் உள்பட மூவர் கடத்தப்பட்ட வழக்கு: 6 பேர் கைது: மேலும் இருவர் தலைமறைவு

பெண் உள்பட 3 பேரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பெண் உள்பட 3 பேரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் உள்பட மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய், ஆயுர்வேத மருத்துவர். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்த உஷா (52), விஜயேந்திரன் (52) ஆகியோர் நடத்தி வரும் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வந்தார்.
அப்போது  ஆயுர்வேத மருந்துகள் வாங்குவதில்  இருவரிடமும் ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டு சஞ்சய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், உஷாவும், விஜயேந்திரனும்  பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். கடந்த 11-ஆம் தேதி செல்லிடப்பேசியில் உஷாவைத் தொடர்புகொண்ட சஞ்சய்,  நாமக்கல்லில் தான் இருப்பதாகவும்,  ஏற்கெனவே கொடுத்த மருந்து பொருள்களைத் தன்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதை நம்பி உஷா, அவரின் உறவினர் கோபிகிருஷ்ணன் மற்றும் விஜயேந்திரன் ஆகிய 3 பேரும் 11-ஆம் தேதி மாலை காரில் நாமக்கல்லுக்குச் சென்றனர்.
அன்று மாலை 6 மணிக்கு பிறகு உஷாவை அவரது சகோதரி லட்சுமி (40) செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது உஷா, சஞ்சய் உள்பட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதைத் தொடர்ந்து 12-ஆம் தேதி லட்சுமி, நாமக்கல் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில்,  டிஎஸ்பி பி. கே. ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சஞ்சயை போலீஸார் தேடி வந்தனர்.
அப்போது போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த சஞ்சய்யும், அவரது கூட்டாளிகளும்  உஷா உள்ளிட்ட மூவரை சேலத்தில் விட்டுச் சென்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய லோகேஷ் என்பவர்  நாமக்கல் அருகே புதுச்சத்திரத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்று லோகேஷை கைது செய்த போலீஸார் அவர் அளித்த தகவலின்பேரில் கூட்டாளிகளான நவீன், சேகர், கிருஷ்ணன், சீனிவாசன், மனோஜ் ஆகிய மேலும் 5 பேரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய நபரான சஞ்சய் மீது கிருஷ்ணகிரி, திருச்சியில் ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. தலைமறைவாகவுள்ள சஞ்சய் மற்றும் அவருக்கு உதவி செய்த பெரியசாமி என்பவரைத் தேடி வருகிறோம். துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, பொருள்களை மீட்ட தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு பாராட்டி பரிசளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com