1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார். 

நாமக்கல் மாவட்டத்தில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார். 
 நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 28 மற்றும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  
 இதுதொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசியது:  நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட 1,61,746 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.   அதைப் போலவே,  இந்த ஆண்டு நடைபெறவுள்ள தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 1.60  லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
  இப் பணிக்காக கிராமப் பகுதியில் 1,079 முகாம்களும்,   நகராட்சிப்  பகுதியில் 119 முகாம்களும் என மொத்தம் 1,198 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.   இப் பணிகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்,  சத்துணவுத் திட்டத் துறை,  பள்ளிக்கல்வித் துறை,  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை,  வருவாய்த் துறை,  ரோட்டரி சங்கம்,   மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,823 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  
    மேலும்,  மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம்,   ரயில் நிலையம்,   சந்தைகள்,   திரையரங்குகள்,  கோயில்கள்,  சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
   மேலும்,  சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களான நாடோடிகள்,  நரிக்குறவர்கள்,  கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்களும் அமைக்கப்படவுள்ளன.  சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் பிற துறை சார்ந்த சுமார் 118-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 
   தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.  அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது,  பாதுகாப்பானது.
   இதனால் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள்,  குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும்,  மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 
   கூட்டத்தில்,   சுகாதாரத் துறை துணை இயக்குநர் கோ.ரமேஷ்குமார் உள்பட மருத்துவத் துறை,  வருவாய்த் துறை,  வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com