நாமக்கல் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நிறைவு: 153 பேருக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

வருவாய் தீர்வாயத்தில் 153 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

வருவாய் தீர்வாயத்தில் 153 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.
 நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்று வந்தது. வருவாய் தீர்வாயத்தின் இறுதி நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில் ஜோடிகை அணியார், சர்வமான்ய அணியார், காதப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று உள்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உள்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 146 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 வருவாய் தீர்வாயத்தில் வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு, அரசு நிலங்கள், தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு உள்ளிட்ட 24 வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு சரிபார்த்தார்.
 இதனைத் தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தற்காலிக உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 44 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்களையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 20 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை என மொத்தம் 153 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 இதில், நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.துரை, நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் சி.செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் டி.அருள், ஆர்.மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com