ஆத்தூர் அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு

ஆத்தூர் அருகேயுள்ள தேவியாக்குறிச்சியில் இரு நடுகற்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

ஆத்தூர் அருகேயுள்ள தேவியாக்குறிச்சியில் இரு நடுகற்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
சேலம் வரலாற்று ஆய்வு மைய  ஆய்வாளர்கள்  வீரராகவன்(விழுப்புரம்),  பொன்.வெங்கடேசன்(ஆறகளூர் ), மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் ஆத்தூர் அரசினர் கலைக் கல்லூரி மாணவர் செல்வக்குமார் அளித்த தகவலின்பேரில் தேவியாக்குறிச்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தெற்குமேடு எனும் இடத்தில் விவசாயி ராமசாமியின் நிலம் அருகே ஏரிவாய்க்கால் கரையில் அருகருகே இருந்த இரு நடுகற்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியது:-
 இடது பக்கம் உள்ள நடுகல்லானது 76 செ.மீ உயரமும்,55செ.மீ அகலமும்,12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்புசிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
12-ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகளூரைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகளூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவிர் குறிச்சியில் நிலம் தானமாகத் தரப்பட்டுள்ளது.
வாணகோவரையர்கள் ஆட்சியின்போது ஹெய்சாளர்கள்,பாண்டியர்கள்,விஜயநகர பேரரசு போன்றோருடன் போரில் ஈடுபட்டனர்.அந்தப் போர்களில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும்.இதன் காலம் 14ஆம் நூற்றாண்டு என கருதலாம்.
இந்த வீரனின் வலதுபுறம் மற்றொரு நடுகல் காணப்படுகிறது.  76 செ.மீ. உயரமும்,58 செ.மீ. அகலமும்,7 செ.மீ. தடிமனும் உள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். மகத நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு போரில் வீரமரணம் அடைந்த வீரன் நினைவாக இந்தக் கல்  வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com