வாழப்பாடி பகுதியில் அரிதாகி வரும் மருத்துவக் குணம் கொண்ட அத்தி மரங்கள் 

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் அரிதாகக் காணப்படும் அத்தி மரங்களில் பருவம் தொடங்கியதால் மருத்துவக் குணம் கொண்ட அத்திப் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளன. 
வாழப்பாடி பகுதியில் அரிதாகி வரும் மருத்துவக் குணம் கொண்ட அத்தி மரங்கள் 

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் அரிதாகக் காணப்படும் அத்தி மரங்களில் பருவம் தொடங்கியதால் மருத்துவக் குணம் கொண்ட அத்திப் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளன.
 மூலிகை மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மரமாக அத்தி விளங்கி வருகிறது. அத்திப் பழங்கள் மட்டுமின்றி, மரத்தின் பட்டை, இலைகள், மரத்திலும் வேரிலும் சுரக்கும் பால் ஆகியவற்றுக்கும் நோய் தீர்க்கும் மருத்துவ குணமுண்டு.
 நீரோட்டமான களிமண் நிலம் மற்றும் ஆற்றுப் படுகைகளில் நன்கு வளரும் அத்தி மரங்களில், பூவும், விதைகளும் சேர்ந்தே பழமாகிறது. பூக்கள் வெளியில் தெரிவதில்லை. அதனால்தான் அதிசயமான நிகழ்வுகளை "அத்தி பூத்தாற்போல' என பழமொழியாக குறிப்பிடுகின்றனர்.
 பெரிய முட்டை வடிவிலான இலைகள் கொண்ட அத்திமரங்களில், அடிப்பாகத்தில் இருந்து தண்டு, கிளைகளின் பிரிவு உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கொத்துக் கொத்தாக காய்கள் காய்த்து கனியாகின்றன. அத்தி மரங்கள் நாட்டு அத்தி, சீமை அத்தி என இரு வகைப்படும். பச்சை நிறமான காய்கள் பழுத்ததும் உள்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம்பழ விதைகளை போல சிறிதாகக் காணப்படும். அத்திப் பழங்களை உலர வைத்து, பதப்படுத்தி மாதக் கணக்கில் வைத்து பயன்படுத்தலாம்.
 அத்திப் பழங்கள், உணவை முழுமையாகச் செரிக்க செய்து, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகின்றன. ஈரல், நுரையீரல் பாதிப்புகளுக்கும் மருந்தாகின்றன. வாய் துர்நாற்றத்தை நீங்குவதுடன், தலை முடியையும் நீளமாக வளரச்செய்யும் குணமுள்ளது. பார்ப்பதற்கு செந்நிறத்தில் அழகாகக் காணப்படும் நாட்டு ரக அத்திப் பழத்துக்குள் சிறு பூச்சிகள், புழுக்கள் காணப்படுகின்றன. அதனால், அத்திப் பழத்தை இரண்டாக பிளந்து பூச்சிகளை நீக்கி உண்ண வேண்டும்.
 பதப்படுத்தப்பட்ட சீமை அத்திப் பழங்கள், யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இது வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூல நோய்களுக்கும் அத்திப் பழங்கள் மருந்தாகின்றன. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். சிறுநீர்ப்பை புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி நீக்கவும் அத்திப்பழம் மருந்தாகிறது.
 கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தச் சோகை நோய் வராது. நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும்.
 வாழப்பாடி பகுதியில் அருநூற்றுமலை, சந்துமலை, நெய்யமலை மற்றும் கல்வராயன் மலைகளிலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக மழைப் பொழிவு குறைந்து வருவதால், அத்தி மரங்கள் அசுர வேகத்தில் குறைந்து அரிதாகி விட்டன. வனப் பகுதிகளிலும் கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரவலாக சொற்ப எண்ணிக்கையிலேயே அத்தி மரங்கள் காணப்படுகின்றன.
 தற்போது பருவம் தொடங்கியதால், அரிதாகிவரும் அத்தி மரங்களில் மருத்துவக் குணம் கொண்ட அத்திப் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துள்ளன. வாழப்பாடி பகுதி கிராமங்களில் மட்டுமின்றி, வனப் பகுதியிலும் அரிதாகிவிட்ட இம் மரத்தை அதிகளவில் நட்டு வளர்ப்பதற்கு வனத் துறையும், பொதுமக்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com