மதுரை மாநகராட்சியில் ரூ.1.89 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்: ரூ. 45 கோடியில் இரு புதிய பாலங்கள், இடங்களில் மாற்றுத்திறனாளி நேய பூங்கா

மதுரை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2017-18) ரூ.1.89 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2017-18) ரூ.1.89 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 மாநகராட்சியின் வருவாய் ரூ.2 ஆயிரத்து 543 கோடி எனவும், செலவு ரூ.2 ஆயிரத்து 541 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, உபரியாக ரூ.1.89 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சியின் ஆணையரும், தனி அலுவலருமான சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அடிப்படை வசதிகளான குடிநீர், சாலைகள், பாதாளச் சாக்கடை, தெருவிளக்குகள் பராமரிப்பு மற்றும் நகரை அழகுபடுத்துவது, மதுரையின் புராதன சிறப்பு, சுற்றுலாவை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
 மாநகராட்சி துணை ஆணையர் செ.சாந்தி, நகரப் பொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையர் (கணக்கு) கருப்பையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பட்ஜெட் வரவு-செலவு (2017-2018)
வரவு - ரூ.2,543.76 கோடி
செலவு -ரூ.2,541.87 கோடி
உபரி - ரூ.1.89 கோடி

பட்ஜெட்டில் உபரி எப்படி?
 கடந்த பல ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1.89 கோடி உபரியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
 இதுபற்றி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறியது: மதுரை மாநகராட்சியின் விடுபட்ட வருவாய் இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொத்துவரி விதிப்பில் விடுப்பட்ட கல்லூரி, பள்ளி கட்டடங்கள் வரிவிதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சொத்துவரி, பாதாளச் சாக்கடை இணைப்புக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கிய வருவாய் அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசிடம் இருந்து இந்த ஆண்டுக்கு அதிக நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் உபரி சாத்தியமாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.


ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டம்:  பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் ரூ.1,342 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பு ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பாக ரூ.200 கோடி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் நான்கு வெளிவீதிகள், வைகை ஆற்றங்கரையோரப் பகுதி மேம்படுத்தப்பட உள்ளன. தெப்பக்குளத்தை மேம்படுத்தி, தண்ணீரை நிற்கச் செய்வதற்கான நடவடிக்கை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
 அம்ரூத் திட்டத்தில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய வசதிகள் மேம்படுத்தப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டம் ரூ.617 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கைத் தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
 மதுரை மாநகராட்சியின் 56 வார்டுகள், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் 1000 தனிநபர் கழிப்பறைகளும், 16 சமூக கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன. அனைத்து வார்டுகளும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத வார்டுகளாக மாற்றப்படும்.

புராதன பகுதி மேம்பாடு:  தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் வெளிப்பகுதிகளில் தூய்மையாகப் பராமரிக்க பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் ரூ.11.36 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இப் பணிகள் முடிக்கப்படும். ஆவணி மூல வீதிகள், மாரட் வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகளில் பாலித்தீன் தடை செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டிலும் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

புதிய பாலங்கள் - பூங்காக்கள்:   ஒபுளா படித்துறை, குருவிக்காரன் சாலை தரை மட்டப் பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.45 கோடியில் திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள. இந்த ஆண்டில் பணிகள் தொடங்கப்படும். ரூ.2.64 கோடியில் 5 பூங்காக்கள் அமைக்கப்படும். அதேபோல, தாமரைத் தொட்டி சந்திப்பு உள்பட இரு இடங்களில் மாற்றுத்திறனாளி நேய பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்காவுக்குள் நுழைவு முதல் வெளியேறும் வரை அனைத்து அம்சங்களும் மாற்றுத் திறனாளிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com