மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு பேரணி

சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு பேரணி

சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு பேரணி மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இப் பேரணிக்கு தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய மாநிலத் தலைவர் எஸ்.ஏ.மாதப்பன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கா.வாசுகி அருள், ஊராட்சி செயலர்கள் ஒன்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் அ.இசக்கிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.கணேசன் பேரணியைத் தொடங்கி வைத்தார். ராஜா முத்தையா மன்றம் அருகே தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இங்கு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் பேரணியை முடித்து வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இக் கோரிக்கை வலியுறுத்தி நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களையடுத்து, காலமுறை ஊதியம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை 2016 பிப்.19-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். காலமுறை ஊதியம் தொடர்பாக ஊதியக் குழு பரிந்துரையை வழங்கும் என்றும் தெரிவித்து இருந்தார். இதை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com