மதுரை பொலிவுறு நகர் திட்டம் மாசி-வெளி வீதிகள் நவீன சாலைகளாக மாற்றப்படும்

பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றியுள்ள 8 முக்கியச் சாலைகள் விரைவில் நவீனப்படுத்தப்படும்

பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றியுள்ள 8 முக்கியச் சாலைகள் விரைவில் நவீனப்படுத்தப்படும். மேலும் ஆவணி மூல வீதிகளை நடைபாதைகளா மாற்ற ஆலோசிக்கப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் மதுரை மாநகரப் பகுதியில் நவீன சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையரும், பொலிவுறு நகர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி பேசியது:
மதுரை மாநகராட்சியில் பொலிவுறு நகர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தனி நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பகுதியில் சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. வைகை ஆற்றின் ஒரு பகுதியான, வண்டியூர் கண்மாய் பகுதியில் பொலிவுறு திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நான்கு மாசி வீதிகள், 4 வெளி வீதிகள் ஆகிய 8 சாலைகளும் நவீன சாலைகளாக மாற்றப்பட உள்ளன. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைத்துத் தரப்பினரும் இடையூறு இல்லாமல் சாலையைப் பயன்படுத்தவும் இந்த சாலைகளில் இருந்து ரயில் நிலையம், விமான நிலையம் செல்வதற்கான சாலைகளை எளிதில் அடையும் வகையிலும் மேம்படுத்தப்படுகின்றன.
நடைபாதையாகும் ஆவணி மூல வீதி: இப்போது சித்திரை வீதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவோருக்கான நடைபாதையாகவே சித்திரை வீதிகள் இருக்கின்றன.
இதேபோல, நான்கு ஆவணி மூல வீதிகளையும் நடைபாதைக்கு மட்டுமே பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புராதன சின்னங்கள் இருக்கும் சாலைகளும் இணைக்கப்படும். சாலை ஓரங்களில் பொதுமக்கள் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்படும். மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படும் என்றார்.
மாநகராட்சி துணை ஆணையர் மணிவண்ணன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் ந.நடராஜன், சாலை மற்றும் போக்குவரத்து ஆலோசனை நிறுவன திட்ட மேலாளர் அஸ்வதி திலீப், சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com