"அம்மா' திட்ட முகாமில் இனி அனைத்து துறைகளும் பங்கேற்கும்: அமைச்சர்

வருவாய்த் துறையால் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம்களில் இனி அனைத்துத் துறைகளும் பங்கேற்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வருவாய்த் துறையால் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம்களில் இனி அனைத்துத் துறைகளும் பங்கேற்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
 மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் அவர் பேசியது:
  வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட  சேவைகளை அவரவர் வசிப்பிடப் பகுதியிலேயே பெறும் வகையில் அம்மா திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த முகாமின்போது வட்டாட்சியர் அலுவலகமே சம்பந்தப்பட்ட கிராமத்தில் செயல்படும் நிலை கொண்டுவரப்பட்டது.
 தமிழகம் முழுவதும் இதுவரை அம்மா திட்ட முகாம்கள் மூலமாக 60 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 852 வருவாய் கிராமங்கள் பயன்பெற்றுள்ளன.  அம்மா திட்ட முகாம்களில் இதுவரை வருவாய்த் துறை மட்டுமே பங்கேற்று வந்தது. இந்த முகாமை மேலும் மேம்படுத்தும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை,  சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் பங்கேற்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது.
  புதிய வடிவிலான அம்மா திட்டத்தின் முதல் முகாம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.  இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் அம்மா திட்ட முகாம்களில் அனைத்துத் துறையும் பங்கேற்கும்.  இத் துறைகளின் வாயிலாகச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு பொதுமக்கள் அம்மா திட்ட முகாமிலேயே மனுக்கள் அளிக்கலாம்.
அதிமுகவில் அனைவரும் ஒரே அணியாகத் தான் உள்ளோம்.   குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்றார்.
  வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால்:  விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.30 கோடி கனமீட்டர் வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 வருவாய்த் துறைச் செயலர் பி.சந்திரமோகன்: அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அம்மா திட்ட முகாமில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், பா.நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் 770 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 754 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com