காவிரி மகா புஷ்கர் கும்பமேளாவில் பக்தர்களுக்கு வசதி கோரி மனு: திருச்சி ஆட்சியர், ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் காவிரி மகா புஷ்கர் கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யக்கோரி

ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் காவிரி மகா புஷ்கர் கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு திருச்சி ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 சர்வதேச வைஷ்ணவ ராமானுஜ சாமராஜா சபைச் செயலர் கோவிந்த் ராமானுஜ தாசா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் செப்டம்பர் 12 முதல் 24 ஆம் தேதி வரை காவிரி மகா புஷ்கர்பூர்மா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி அம்மா மண்டபத்தில் காவிரியில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இவ்விழாவில் 30 லட்சத்திற்கும் மேலானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆனால், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இங்கு இல்லை. காவிரியில் பக்தர்கள் நீராடும் அம்மா மண்டபத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை, தாற்காலிகமாக உடை மாற்றுவதற்கும் அறைகள் இல்லை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. எனவே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கும்பமேளா விழாவுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருச்சி ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com