மாநகராட்சியுடன் இணைந்ததால் பணிநிலை மாற்றப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள்: 4 ஆண்டுகளாகப் போராடும் நிலை

கிராம ஊராட்சிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற துப்புரவுப் பணியாளர்கள் மாநகராட்சியுடன் இணைந்ததால் தொகுப்பூதியப் பணியாளர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர்.

கிராம ஊராட்சிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற துப்புரவுப் பணியாளர்கள் மாநகராட்சியுடன் இணைந்ததால் தொகுப்பூதியப் பணியாளர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 2011-இல் மதுரையைச் சுற்றியிருந்த மேலமடை, வண்டியூர், உத்தங்குடி, நாகனாகுளம், கண்ணனேந்தல், திருப்பாலை, ஐராவதநல்லூர், சிந்தாமணி, சின்னஅனுப்பானடி, புதுக்குளம், தியாகராஜர் காலனி ஆகிய ஊராட்சிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
இந்த 11 ஊராட்சிகளிலும் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் மதுரை மாநகராட்சிப் பணியாளர்களாக மாற்றப்பட்டனர். 2011 அக்.25 முதல் மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றும் நிலையில், அவர்கள் அனைவரும் தொகுப்பூதிய பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ஊராட்சிகளில் பணியாற்றபோது சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் 6-வது ஊதியக் குழு நிலுவை வழங்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நாளில் இருந்து தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருவதுடன், 6-வது ஊதியக் குழுவின் நிலுவையும் வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், 2012-இல் அப்போதைய ஆட்சியராக இருந்த அன்சுல்மிஸ்ரா, ஊராட்சிகளில் இருந்து மாநகராட்சிக்கு மாற்றப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் 6-ஆவது ஊதியக் குழு நிலுவை ஆகியவற்றை வழங்க உத்தரவு பிறப்பித்தும் மாநகராட்சி நிர்வாகம் அதைச் செயல்படுத்தாமல் உள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியது:
மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகிவிட்டது. காலமுறை ஊதியம் வாங்கியவர்களை, இப்போது தொகுப்பூதிய பணியாளர் பட்டியலில் இணைத்துள்ளனர். எங்களது பணிப்பதிவேட்டில் நிலுவைத் தொகை விவரம் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சிகளில் பணியாற்றியபோது இருந்தபடி, காலமுறை ஊதியம் வழங்கவும் அதை பணிப்பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com