அடிப்படை வசதி கோரி தெர்மகோல் அட்டையுடன் மனு அளிக்க வந்த மக்கள்

மதுரை பரவை பேரூராட்சி 10-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த சிலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு தெர்மகோல் அட்டையுடன் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.

மதுரை பரவை பேரூராட்சி 10-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த சிலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு தெர்மகோல் அட்டையுடன் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.
 அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
  இதுகுறித்து அவர்கள் கூறியது: பரவை பேருராட்சி 10-ஆவது வார்டுக்குள்பட்ட அண்ணா நகர்,  சமுத்ரா நகர்,  சபரி நகர்,  பூங்கா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலை, க ழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்நிலையில் இப்பகுதியில் ஏறத்தாழ 12 ஏக்கரில் அமையவுள்ள தனியார் குடியிருப்புக்காக கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படுகிறது.
   இந்த கழிவுநீர் கால்வாய் முறைப்படி கட்டப்பட வில்லை. அந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அண்ணா நகர்,  சமுத்ரா நகர்,  சபரி நகர் பகுதியில் தேங்கும் வகையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும். ஆகவே, கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என்றனர்.
இரு மதுக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு:  ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் அவனியாபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:  கடந்த 10 நாள்களுக்கு முன் அவனியாபுரத்தில் இருந்து வைக்கம் பெரியார் நகர் வழியாக சேர்மத்தாய் வாசன் கல்லூரி செல்லும் வழியில் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதேபோல, அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையிலும் மற்றொரு கடை திறக்கப்பட்டுள்ளது.
 இந்த இரு கடைகளும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து நீதிமன்றம் நிர்ணயித்துள்ள தூரத்துக்குள் அமைந்திருக்கின்றன.  அதோடு பள்ளிகள், குடியிருப்புகள், கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் பகுதி அருகே கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாகவும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவியருக்குப் பாதுகாப்பு இல்லாமலும் உள்ளது. ஆகவே, இவ்விரு கடைகளையும் அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
   அதே போல்  உசிலம்பட்டி வட்டம் குறவக்குடியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:  குறவக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 68 குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் வீதம் 1999-இல் நிலம் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்டது.  சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வலியுறுத்திய போதும் வருவாய்த் துறையினர் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.   இதற்கிடையே நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை காரணம் கூறி நிலம் அளவீடு செய்வது தாமதம் செய்யப்பட்டது.  இருப்பினும் வழங்கப்பட்ட பட்டா எங்களது பெயரிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. நில உரிமையாளர் தொடர்ந்துள்ள சொத்து சம்பந்தமான வழக்கிற்கும்,  எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  இருப்பினும் நிலத்தை ஒப்படைக்க மறுக்கின்றனர்.  இதனால்,  பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் குடிசை அமைத்தோம். அவற்றில் ஞாயிற்றுக்கிழமை  தீ வைத்து சேதப்படுத்திவிட்டனர்.
  குடிசைகள் சேதமடைந்ததற்கு உரிய நிவாரணமும், பட்டா வழங்கப்பட்ட இடத்தை சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் அளவீடு செய்து ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com