அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அறிவிக்கப்பட்ட "புல்லட்' பரிசை தரமறுப்பு: காளையுடன் வந்து ஆட்சியரிடம் புகார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அறிவிக்கப்பட்ட "புல்லட்' பரிசை விழாக் குழுவினர் தர மறுப்பதாக, வெற்றி பெற்ற காளையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினர் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அறிவிக்கப்பட்ட "புல்லட்' பரிசை விழாக் குழுவினர் தர மறுப்பதாக, வெற்றி பெற்ற காளையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினர் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.
 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்.10 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் கார், புல்லட், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு சார்பில் நடத்தப்படும் விழா என்றாலும் பரிசுப் பொருள்களை, ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியினர் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டு முதன் முறையாக சிறந்த மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு சான்றிதழ்கள், கேடயம் ஆகியன மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டன.
 இதில் சிறந்த காளைக்கான 3-ஆவது பரிசுக்கு ஆனையூர் பெரியஇளங்கான் என்பவரது காளை தேர்வானது. மூன்றாவது பரிசாக புல்லட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜல்லிக்கட்டு பரிசளிப்பு விழாவின் போது காளை உரிமையாளரிடம்  3-ஆம் பரிசுக்கான சான்றிதழ், கேடயம், புல்லட் வாகன பரிசுக்கு அடையாளமாக சாவியின் மாதிரி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.
 ஜல்லிக்கட்டு முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், புல்லட் பரிசை காளை உரிமையாளரிடம் விழாக் கமிட்டியினர் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து பரிசு வென்ற காளையுடன், ஆனையூர் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். அங்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் காளையுடன் வரமுயன்றதால் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, காளை உரிமையாளரை காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்திய போலீஸார், ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காளையுடன் வந்த கிராமத்தினர் கூறியது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினரிடம் பரிசு குறித்து கேட்டபோது தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர். அரசு சார்பில் நடத்தப்பட்ட விழா என்பதால் வாடிப்பட்டி வட்டாட்சியர், மதுரை கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். விழாக் கமிட்டியினரிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com