சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்

மதுரையில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என ஆதங்கப்படும் பொதுமக்கள், கிடைக்கும் தண்ணீரும் கழிவு நீர் கலந்துவருவதாக புகார் கூறுகின்றனர்.

மதுரையில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என ஆதங்கப்படும் பொதுமக்கள், கிடைக்கும் தண்ணீரும் கழிவு நீர் கலந்துவருவதாக புகார் கூறுகின்றனர்.
கடும் வறட்சியால் மதுரையில் 2016 நவம்பர் முதலே நான்கு நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்தது. மேலும் லாரிகள், டிராக்டர்கள் மூலம் தெருக்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைத்து குடிநீர் நிரப்பி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மதுரை சிம்மக்கல் கனகவேல் காலனி பகுதி, அனுப்பானடி ஏற்கெனவே குடிநீரில் கழிவு நீர் கலந்துவருவதாக புகார் எழுந்த நிலையில், முனிச்சாலை பகுதியில் சுகாதாரமற்ற நீர் விநியோகத்தை கண்டித்து மக்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், வில்லாபுரம் பிரதான சாலையில் 63-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கோரியும், கழிவுநீர் கலந்து குழாயில் நீர் விநியோகிக்கப்படுவதையும் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் சமரசம் செய்ததை அடுத்து பல மணி நேரத்துக்குப் பிறகு மறியலைக் கைவிட்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலுக்கு சென்ற நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் சமரசம் செய்ததால் மறியல் கைவிடப்பட்டது.
மாநகராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் சீரமைப்பு, சாலை சீரமைப்பு பணிகளுக்கு பள்ளம் தோண்டும்போதும், புதிய நடைமேடை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களிலும் குழாய்களை சரியாக சீரமைக்காததால், குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுகிறது.  
மகால் வடம்போக்கித் தெருவில் பாரம்பரிய நடைபாதை அமைக்கும் பணியின்போது உடைந்த குடிநீர் குழாய்கள் பல மாதங்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால், அங்கு குடிநீரில் கழிவு நீர் கலந்துவருவதாகவும், வடிகால் வசதியின்றி மழை நீர் தெருக்களில் தேங்குவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதி மார்க்கெட்டில் குழாய் சீரமைப்புக்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாத நிலையில், அப்பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகரப் பொறியாளர் ஏ.மதுரத்திடம் கேட்டபோது, மாநகராட்சிப் பணிகளைவிட தனிநபர் தேவைக்காக பள்ளம் தோண்டும்போது குடிநீர் குழாய்கள் சேதமடைகின்றன. அதை உடனுக்குடன் சீரமைக்கவேண்டும். நகர உதவிப் பொறியாளர்களை அழைத்து ஆலோசித்து சம்பந்தப்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com