இறக்குமதி செய்யப்படும் மரங்களை கிருமி நீக்கம் செய்யாமல் அனுமதிப்பதற்கு தடை கோரி மனு: தூத்துக்குடி துறைமுகத் தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களை கிருமி நீக்கம் செய்யாமல் உள்நாட்டுக்குள் அனுமதிப்பதற்குத் தடை கோரிய மனு மீது

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களை கிருமி நீக்கம் செய்யாமல் உள்நாட்டுக்குள் அனுமதிப்பதற்குத் தடை கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
   தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் சிதம்பரபுரத்தைச் சேர்ந்த எம். செயல்முருகன் தாக்கல் செய்த மனு:
   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் இந்த மரக்கட்டைகளை மெத்தில்குரோமைடு என்ற ரசாயனம் மூலம் கிருமி நீக்கம் செய்த பின்னரே உள்நாட்டுக்குள் கொண்டு செல்லவேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இது, துறைமுகத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் தாவர தொற்றுநோய்த் தடுப்பு அதிகாரிகளுக்கும் தெரியும்.
   ஆனால், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் மரங்கள் கிருமி நீக்கம் செய்யாமல், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், மரங்களில் பதுங்கி இருக்கும் கரையான்கள், மரவண்டுகள், பூச்சிகள் ஆகியன நம் நாட்டில் பரவி ஆபத்து விளைவிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், கடந்த 2003-ஆம் ஆண்டு மத்திய அரசு விடுத்துள்ள அறிவிப்பில், பட்டை உள்ள மரங்கள்,  பட்டை இல்லாத மரங்கள், துண்டுகளாக வெட்டப்பட்ட மரங்கள் ஆகியவற்றை 56 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடம் உலர வைக்க வேண்டும். அதையடுத்து, அனைத்து மரங்களையும் தாவர நோய்த் தடுப்பு அதிகாரி ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
   இந்த நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த 8-ஆம் தேதி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, விதிகளைப் பின்பற்றி சுத்தப்படுத்தப்படாத மரங்களை உள்நாட்டுக்குள் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் ஆகியோர் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகக் கழகத் தலைவர், சுங்கத் துறை ஆணையர்(இறக்குமதி), தாவரத் தொற்று நோய்த் தடுப்பு அதிகாரி ஆகியோர் மனுவை பரிசீலித்து, 15 நாள்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com