மதுரையில் கருவேல மரங்கள் அகற்றும் பணியை உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணியை, உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. செல்வம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணியை, உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. செல்வம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 4,609 ஹெக்டேர் பரப்பளவில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்தார்.  உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள்  அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை, அந்தந்த மாவட்ட நீதிபதியும், வழக்குரைஞர் ஆணையர்களும் கண்காணித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை, உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. செல்வம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பாண்டிகோவில், வண்டியூர் புறவழிச்சாலை, சிந்தாமணி, பெருங்குடி, வில்லாபுரம் உள்ளிட்ட பல இடங்களைப் பார்வையிட்ட நீதிபதி, இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து வாகனப் பழுதுநீக்கும் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிமனையில் அகற்றப்படாமல் இருந்த கருவேல மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தினார்.
   இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
   மதுரையில் 49,800 ஹெக்டேர் பரப்பளவில் கருவேல மரங்கள் உள்ளன. இதில், 80 சதவீத மரங்கள் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் உள்ளன. மேலும், மதுரை மாவட்டத்தில் இதுவரை 4,609 ஹெக்டேர் பரப்பளவில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர் ஆணையர்களோடு இணைந்து, இதர இடங்களிலும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அகற்றாதவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் எனும் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவற்றை அகற்றுவதில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரையும் ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது.  மதுரை முழுவதும் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தினசரி 50 ஜேசிபி இயந்திர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
இதில், மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com