பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் விண்ணப்பம் ரத்து: காவலர் தேர்வு எழுத மூவருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த மூவரின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த மூவரின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நிராகரித்ததை ரத்து செய்யக்கோரும் வழக்கில், மூவரையும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அஜீத்குமார் தாக்கல் செய்த மனு:
 நான் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியபோது,காய்ச்சல் பாதிப்பு காரணமாக சரியாக எழுதாமல் தோல்வி அடைந்து விட்டேன். மேலும் பொருளாதாரச் சூழல் காரணமாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து, தொடக்க நிலை அடிப்படைக் கல்வியை (பிரி பவுண்டேசன் கோர்ஸ்)
பயின்றேன். இது பத்தாம் வகுப்புக்கு இணையானது. மேலும், பத்தாம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்படும் அரசின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கப் போதுமானத் தகுதியுடையது.
 இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் சிறைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன்.
 வரும் 21-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், உரிய கல்வித் தகுதி இல்லை எனக்கூறி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் எனது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது சட்டத்துக்கு எதிரானது.  
 எனவே தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் எனது விண்ணப்பத்தை நிராகரித்ததை ரத்து செய்து, தேர்வெழுத அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  மேலும் இதே போன்று மதுரை ரிசர்வ் லைனைச் சேர்ந்த மணிகண்டன், முருகன் ஆகியோரும் தேர்வு எழுத அனுமதி கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி என்.சேஷசாயி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவைப்படுகிறது. இருப்பினும், எழுத்துத் தேர்வு மே 21-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதால், அதனைக் கருத்தில் கொண்டு மூவரும் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும். அதே சமயம் மூவரின் தேர்வு முடிவுகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com