கடைமடை பகுதிக்கு இன்னும் வந்து சேராத வைகை தண்ணீர்: விவசாயிகள் புகார்

வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
  தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு: வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டத்தின் முதல்போக சாகுபடிக்கு நவ.1 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி, சமயநல்லூர் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும், கடைமடை பகுதிகளுக்கும் இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை. ஆகவே, அணையிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
    இதேபோல, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி அளித்துள்ள மனுவில்,  மேலூர் பகுதி ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
  ஒருபோக சாகுபடியில் உள்ள ஏறத்தாழ  ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. அந்த மாதங்களில் தண்ணீர் திறந்தால் மட்டுமே அந்த ஆண்டில் விளைச்சலைப் பெற முடியும். ஆகவே, மேலும் தாமதம் இல்லாமல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
  மடிக்கணினி கிடைக்கவில்லை...: மதுரையில் உள்ள இரு அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் தங்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை எனக் கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  மேல்நிலை வகுப்பில் வரலாறு பாடப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மடிக்கணினி வழங்க மறுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகளை அழைத்த ஆட்சியர்,  அனைத்துப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்குமாறு அறிவுறுத்தினார்.
கிராமத்தினர் முற்றுகை...:  போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கக் கோரி மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
        மலைச்சாமிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரில் போதைப்பொருளுக்கு எதிராகச் செயல்பட்டவரைக் கைது செய்திருக்கின்றனர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு...: குறைதீர் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் மனுக்களைப் பதிவு செய்து வரிசையில் காத்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நடைமுறை உள்ளது. 
  அலுவல் காரணமாக ஆட்சியர் வரத் தாமதமாகும் நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்கள் பெறுவர். இருப்பினும் வரிசையில் நிற்பவர்களில் பலர் ஆட்சியர் வந்தவுடன் அளிக்க வேண்டும் என காத்திருக்கின்றனர்.
 இதற்கிடையே, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்துபவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கூட்டமாக வரும்போது போலீஸார் அவர்களைத் தடுத்து பிரதிநிதிகளை மட்டும்  மனு அளிக்க ஆட்சியரிடம் அழைத்து வருவது  வழக்கம். 
  இந்நிலையில், திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் வரிசையில் காத்திருந்தவர்கள்,  வரிசையைப் பின்பற்றாமல் போலீஸார் நேரடியாக மனு அளிக்க அழைத்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 
   இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர்களை அமைதிப்படுத்திய அதிகாரிகள் மனுக்களைப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com