கார்த்திகைக்கு தயாராகும் மண் அகல் விளக்குகள்

கார்த்திகை திருநாளுக்காக மதுரை பெத்தானியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிட்டிகை அகல் விளக்குகள் கண்மாய் மண்ணால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கார்த்திகை திருநாளுக்காக மதுரை பெத்தானியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிட்டிகை அகல் விளக்குகள் கண்மாய் மண்ணால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
 வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மதுரையில் பெத்தானியபுரம், விளாச்சேரி, பரவை பவர்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை அகல் விளக்குகள் கண்மாய் மண்ணால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள 10 குடும்பங்கள் தற்போது கோச்சடை கண்மாயில் மண் எடுத்து அகல் விளக்குகளைத் தயாரித்துள்ளனர். கார்த்திகைக்கு மட்டும் சுமார் 7 லட்சம் விளக்குகள் தயாரித்து விற்பதாக அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பரமன் தெரிவித்தார். பெத்தானியபுரத்தில் தயாரிக்கப்படும் மண் விளக்குகள் ஒவ்வொன்றும் நாற்பது பைசா என்ற அளவில் மொத்த வியாபாரிகளிடம் விற்கப்படும் நிலையில், அவை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்கப்பட்டு வருகின்றன. வண்டி மண் ரூ.500 வாங்கினால் அதிலிருந்து சுமார் 20 ஆயிரம் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுவதாக விளக்குத் தயாரிப்பு தொழிலாளர்கள் கூறினர். இத்தொழிலில் தற்போது லாபம் என்பது இல்லா நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் விளக்குகளை மக்கள் வாங்கி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் மண் விளக்கு தயாரிக்கும் எங்களுக்கு முதலுக்கு மேலான கூலியும் கிடைப்பதில்லை. ஆகவே பலர் இத்தொழிலைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள் என பரமனின் மனைவி ஜோதி கூறினார்.
கார்த்திகை திருநாளுக்கு திருக்கோயில்கள், வீடுகளில் அவசியம் மண் விளக்குகளையே ஏற்ற வேண்டும். அவைகளால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு உள்ளது என்ற உண்மையை மக்கள் உணர்ந்தால் மீண்டும் மண் அகல்விளக்கைத் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் அத்தொழிலில் ஈடுபடுவோர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com