வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததால் ஒருவருக்கு கடவுச்சீட்டு மறுப்பது சட்டவிரோதமானது: உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததை வைத்து ஒருவருக்கு கடவுச்சீட்டு மறுப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததை வைத்து ஒருவருக்கு கடவுச்சீட்டு மறுப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
     கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் வி. சுரேஷ். இவர், உணவக மேலாண்மை பட்டயப் படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக, கடவுச்சீட்டு கேட்டு மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.     விண்ணப்பத்தில் குற்றவழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட காரணத்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
     இந்நிலையில், தனக்கு கடவுச்சீட்டு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுரேஷ் மனு செய்திருந்தார். மனுவில், என் மீது முன்விரோதம் காரணமாக போலீஸ்காரர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், 2015-இல் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ளது. அந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி எனது கடவுச்சீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
     ஆனால், என் மீதான வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ளது. நீதிமன்ற விசாரணையில் இல்லை. மேலும், நீதிமன்ற விசாரணை என்பது ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே தொடங்கும். இது தொடர்பாக கடவுச்சீட்டு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தேன்.  இருப்பினும், எனக்கு கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை. எனவே, எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
   இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மீதான வழக்கில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த இறுதி அறிக்கை 2015 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டபோதிலும், இதுவரை நீதிமன்றத்தால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்தால், மட்டுமே கடவுச்சீட்டு வழங்க மறுக்க முடியும். 
     இறுதி அறிக்கை தாக்கல் செய்ததை வைத்து ஒருவருக்கு கடவுச்சீட்டு மறுப்பது சட்டத்துக்கு புறம்பானது.
இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜராகுவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மனுதாரர் உறுதி அளித்துள்ளார். எனவே, மனுதாரரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com