டெங்கு காய்ச்சல் அறிகுறி: மதுரை அரசு மருத்துவமனையில் 249 பேர் அனுமதி

மதுரை  அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறிகளுடன் 249  பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மதுரை  அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறிகளுடன் 249  பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 201 பேருக்கு தட்டணுக்கள் குறைவாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
   தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 130-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் டெங்கு நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறிகளுடன் வரும் நோயாளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தது: மதுரை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நிலவரப்படி (அக்.5),  249 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 139 பேரும், பெண்கள் 110 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 பேருக்கு  டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  201 பேருக்கு தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் வார்டுகள் தவிர பல்வேறு வார்டுகளிலும் நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுவாக பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல்கள் தற்போது பரவி வருகின்றன. இக்காய்ச்சல்களை ஏற்படுத்தும் கிருமிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு குணம் படைத்தவை. ஆகையால் இவையனைத்தையும் டெங்கு என்று வகைப்படுத்த முடியாது.  மேலும் காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளை உடனடியாகக் கவனம் செலுத்திப் பார்ப்பதற்காகவே, சிறப்பு வார்டுகளை அமைத்துள்ளோம். அவ்வார்டுகளில் தேவையான படுக்கைகள்,  கொசுவலைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்று தெரிவித்தன.
இந்நிலையில் வைரஸ் காய்ச்சலுக்காக உருவாக்கப்பட்டுள்ள 304ஆவது வார்டில் மட்டும் தற்போது 28 பேர் தங்கி சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஒத்தக்கடை அருகேயுள்ள தாமரைப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி கூறுகையில், தாமரைப்பட்டியில் பெரும்பாலோனர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகிலுள்ள ராஜாக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பொதுமக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். சிலர் நேரடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கே சென்று விடுகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com