ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டெங்கு பரிசோதனைக் கருவிகள்

மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டெங்கு பாதிப்பை கண்டறியும் சாதனங்கள் பொது சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டெங்கு பாதிப்பை கண்டறியும் சாதனங்கள் பொது சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ளன.
 தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.  காய்ச்சல் பாதிப்புக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் ஆயிரக் கணக்கானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.  நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லாததால் சிகிச்சையில் தொய்வு இருந்து வருகிறது. குறிப்பாக ரத்த பரிசோதனைக்கான வசதிகள் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை.  இதனால்  காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களைச் சோதித்து உடனடியாகச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
 இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ரத்த அணுக்கள் பகுப்பாய்வு செய்யும் சாதனத்தை  (இங்ப்ப் ஸ்ரீர்ன்ய்ற்ங்ழ்) ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுசுகாதாரத் துறை வழங்கியுள்ளது.  மதுரை மாவட்டத்துக்கு மொத்தம் 22 சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும்,  6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும்,  அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தோப்பூர் தொற்றுநோய் மருத்துவமனைக்கு தலா ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தை சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வியாழக்கிழமை வழங்கினார்.
 இந்த சாதனத்தில் 20 வகையான ரத்தப் பரிசோதனைகளைச் செய்ய முடியும். 55 விநாடிகளில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.  ஒரு மணி நேரத்தில் 60 நபர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும்.   தனியார் பரிசோதனை மையங்களில் ரூ.500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பரிசோதிக்கப்படும்.  இந்த சாதனத்தில் தட்டணுக்கள் பரிசோதனை முக்கியமாக செய்யப்படும். இதன் மூலம் சாதாரண காய்ச்சலா, டெங்கு காய்ச்சலா என்பதைத்  தெரிந்து கொள்ள முடியும்.
  அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும், மேல்சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யவும்  கர்ப்பிணிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்வதற்கும் உதவியாக இருக்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com