ஊதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

ஊதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் மதுரை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் மதுரை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள், நடைமேடைகள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தினர் நூறு பேரை பணி அமர்த்தியுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் மதுரை ரயில் நிலைய துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் நௌஷத் அலி தலைமையில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை 6.30 மணியளவில் தொழிலாளர்கள் அனைவரும் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு கூடினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார், தீபாவளி பண்டிகை காரணமாக மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் நேரத்தில் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரதான நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த நேரிடும் என்று தெரிவித்தனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 இதையடுத்து போராட்டத்தை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவு வாயிலில் தொடர தொழிலாளர்கள் முடிவு செய்தனர். மேற்கு நுழைவு வாயிலில் உள்ள ரயில்வே மருத்துவமனை வளாகத்தின் முன் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை தொடர்ந்தனர். பகல் 1 மணி வரை போராட்டம் தொடர்ந்த நிலையில் ஊதிய நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com