ஆடி அமாவாசை: மதுரை கோயில்களில் தர்ப்பண பூஜை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ததால், மதுரையிலுள்ள கோயில்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் கூட்டம் அலைமோதியது.


ஆடி அமாவாசையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ததால், மதுரையிலுள்ள கோயில்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் கூட்டம் அலைமோதியது.
ஆடி அமாவாசை தினத்தில் கோயில்கள், நீர் நிலைகளில் தர்ப்பண பூஜை நடத்துவது வழக்கம். இதையொட்டி, சனிக்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கிழக்கு-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள 16 கால்மண்டபம் அருகே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில், ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து தர்ப்பண பூஜையில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், சுவாமி சன்னதிக்கு பக்தர்கள் வழிபடச் சென்றதால், அங்கும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர், செல்லூர் திருவாப்புடையார் ஆகிய கோயில்களிலும் தர்ப்பண பூஜையில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.
இதற்கான வசதிகளை, கோயில் இணை ஆணையர் என். நடராஜன் செய்திருந்தார்.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள மண்டபப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். அதேபோல், பேச்சியம்மன் படித்துறை வைகை ஆற்றுப் பகுதியிலும் ஏராளமானோர் தர்ப்பண பூஜையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மதுரை அருகேயுள்ள அழகர்மலை நூபுரகங்கை, கீழக்குயில்குடி, புல்லூத்து, நாகதீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்: ஆடி அமாவாசையையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சத்திய கிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சரவணப் பொய்கையில் உள்ள சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், மலைக்கு பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சதுரகிரி மகாலிங்க சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநகர் சித்தி விநாயகர் திருக்கோயிலில் உள்ள காசி விஸ்வநாதருக்கு ஆடி அமாவாசையையொட்டி, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com