"தொழிலாளர்கள், விவசாயிகளோடு, காப்பீட்டு ஊழியர்களும் போராட வேண்டும்'

மத்திய அரசுக்கு எதிராக  தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் காப்பீட்டுத்துறை

மத்திய அரசுக்கு எதிராக  தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் காப்பீட்டுத்துறை ஊழியர்களும் இணைந்து போராட வேண்டும் என்று காப்பீட்டுத்துறை ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலர் சஞ்சய் ஜா பேசினார்.
மதுரை மண்டல பொது காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் 25-ஆவது மண்டல மாநாடு மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்து பொது காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலர் சஞ்சய் ஜா பேசியது: பொது காப்பீட்டுத் துறையில் பங்கு விற்பனையை அரசு கைவிட வேண்டும். அரசுடைமையாக்கப்பட்ட  நிறுவனங்கள் ஒன்றிணைந்து அமைப்பை வலுப்படுத்தி காப்பீட்டுத்துறையில் தனியார் மயமாக்கலுக்கு எதிராக போராட வேண்டும். 
மேலும் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிரான  தேசிய ஓய்வூதிய புதிய திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கம், பல்வேறு ஊழியர்கள் சங்கங்களுடன் இணைந்து கூட்டு இயக்கங்களை நடத்தி வருகிறது. அரசின் மக்கள் விரோத, ஊழியர் விரோத போக்குகளுக்கு எதிராக இந்த கூட்டுப்போராட்டம் தொடரும்.  இந்தியாவில் சமூகநலத் திட்டங்களுக்காக  ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி இரண்டு சதவீதமாக உயர்த்தப்பட்டால் மாதந்திர முதியோர் ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்த முடியும்.   மத்திய அரசு நாட்டில் அனைத்து தரப்பு தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. எனவே தொழிலாளர்கள், விவசாயிகள்  நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் காப்பீட்டுத்துறை ஊழியர்கள் தங்களையும் இணைத்துக் கொள்வார்கள் என்றார்.
மாநாட்டில்,  அரசு காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பொது காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். பொது காப்பீட்டு நிறுவனத்தை பலப்படுத்தப்படும் வகையில் இதர அரசு காப்பீட்டு நிறுவனங்களையும் இணைத்து ஒரே நிறுவனமாக உருவாக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் சங்கத்தின் புதிய தலைவராக ஆர்.ராஜேந்திரன், துணைத் தலைவர்களாக எம்.புஷ்பராஜன், வி.எஸ்.எஸ்.எஸ்.ராஜன், ஆர்.ராமநாராயணன், பி.மோகன், பொதுச்செயலராக வி.ரமேஷ், 
இணைச் செயலராக பி.ராஜமகேந்திரன், பி.சத்தியநாதன், ஆர்.ராமகிருஷ்ணன், ஜெயசுதா ராஜன், பொருளாளராக என்.மோகன்,  துணைப் பொருளாளர் எஸ்.ஆர்இளமாறன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com