பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்: விசாரணைக்கு பல்கலை. நிர்வாகம் உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்  மீது ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ள பாலியல் புகாரின் மீது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்  மீது ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ள பாலியல் புகாரின் மீது விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் கேரளத்தைச் சேர்ந்த மாணவி  ஆராய்ச்சி படிப்பில் பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவி தன்னுடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார்.
மாணவியின் புகார் தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரின் மீது முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை விசாரணைக்குழு அமைக்கப்பட்டவுடன், புகார் தெரிவித்த மாணவி மற்றும் பேராசிரியர் கர்ண மகாராஜனிடமும் விசாரணை நடத்தப்படும். முழுமையான விசாரணை முடிந்த பிறகு விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
குற்றச்சாட்டு தொடர்பாக பேராசிரியர் கர்ண மகாராஜன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: 
தற்போது புகார் தெரிவித்துள்ள மாணவி, கடந்த 2017-இல் பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆராய்ச்சி மாணவியாக சேர்ந்தார்.  கடந்த 4 மாதங்களாக வகுப்புக்கு வரவில்லை. வகுப்புகளுக்கு வராத நாள்களுக்கும் சேர்த்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். 
இதை அவர் தொடர்ந்து செய்து வந்ததால் பல்கலைக்கழக விதிகளின் படி எச்சரிக்கை விடுத்தேன். மேலும் கடந்த வாரமும் அவர் இதுபோல செய்ததால் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். இதை திசை திருப்புவதற்காக என் மீது லஞ்சம் பெற்றதாகவும், பாலியல் குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ளார். மாணவி வகுப்புகளுக்கு வராத நாள்களுக்கும் கையெழுத்திட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.  விசாரணை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். விசாரணை  நடக்கும்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com