இங்கிலாந்து ராணியின் தூதுவர்கள் மதுரை வருகை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் சேவைகளையும், அவர் மீது மக்களை கொண்ட மரியாதை குறித்தும் ஆவணப்படுத்துவதற்காக இங்கிலாந்து ராணியின் பிரதிநிதிகள் இருவர்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் சேவைகளையும், அவர் மீது மக்களை கொண்ட மரியாதை குறித்தும் ஆவணப்படுத்துவதற்காக இங்கிலாந்து ராணியின் பிரதிநிதிகள் இருவர் சனிக்கிழமை மதுரை வந்தனர்.
உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் சந்தன பீரொளி. இவர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர். இவர் பென்னி குவிக் பற்றியும் அவர் கட்டிய அணை குறித்தும் இங்கிலாந்து ராணியிடம் கூறியுள்ளார். மேலும், அவரை பலர் தெய்வமாக வணங்குவதாகவும், அதனால் தேக்கடியில் உள்ள அவரது கல்லறையை இடிக்கக் கூடாது எனவும் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தாராம். இதன் எதிரொலியாக ராணி தனது பிரதிநிதிகளாக புனித பீட்டர் ஆலய செயலர் சூசன் பெரோ, இங்கிலாந்து தேவாலயத்தைச் சேர்ந்த ஷாரோன் பில்லிங் ஆகிய இருவரை தமிழகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். அவர்கள் சனிக்கிழமை மதுரை வந்தனர்.
மதுரை வந்த அவர்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் தேனி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ:
தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் பொறியாளர் பென்னி குவிக். தென் மாவட்ட மக்களின் துயர் தீர்த்த ஜான் பென்னி குவிக் கல்லறையை பாதுகாக்கும் வகையில் சூசன் பெரோ, ஷாரோன் பில்லிங் ஆகியோர் உதவவேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ஷாரோன் பில்லிங் கூறியது:
இங்கிலாந்து முறைப்படி 100 ஆண்டுகளாக இருக்கும் கல்லறையை அகற்ற வேண்டும். தேக்கடியில் அமைந்துள்ள பென்னி குவிக்கின் கல்லறை அமைக்கப்பட்டு 100ஆண்டுகளைத் தாண்டிய நிலையில், அவரது கல்லறை அகற்றப்படக் கூடாது என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பென்னி குவிக்கின் சேவைகள், அவர் மீது தென் தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்பு, மரியாதை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் நோக்கிலேயே இங்கு வந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் 15-ஆம் தேதி கம்பம் பகுதியில் நடைபெறும் பென்னிகுவிக்கின் 176-ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளயிருப்பதாகவும், தாங்கள் இதனை மிகவும் பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com