பல்கலை., கல்லூரி, பள்ளிகளில் பொங்கல் விழா

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிகளில் பொங்கல் விழா நடைபெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிகளில் பொங்கல் விழா நடைபெற்றது.
வியாழக்கிழமை (ஜன.11) காமராஜர் பல்கலைக்கழக வளாகம் டாக்டர் மு.வ.அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு துணைவேந்தர் பேராசிரியர் பி.பி. செல்லத்துரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்துகொண்டார்.
பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பொங்கலிட்டு விழாவைக் கொண்டாடினர். நாட்டுப்புற நடனம், பாடல் மற்றும் உறியடி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விவசாயிகள் கொண்டு வந்திருந்த மாடுகளுக்கு பொங்கல் விநியோகிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியிருந்த கிராம மக்களும் விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு துணைவேந்தர் சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.சின்னையா, ஆலோசகர் செல்வராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை நான்காம் தமிழ்சங்க வளாகத்தில் செந்தமிழ்க் கல்லூரி மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்தி தைத் திருநாளைக் கொண்டாடினர்.
வேலம்மாள் கல்லூரி: மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொங்கல் விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பொங்கலிடும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பிரான்ஸ் நாட்டு பயணி ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களை வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் வரவேற்று கெளரவித்தார்.
குயின்மீரா பள்ளி: மதுரை கோச்சடையில் உள்ள குயின்மீரா சர்வதேசப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனத் தலைவர் பேராசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி இயக்குநர் கவிஞர் அபிநாத் சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியைகள் பொங்கலிட்டு கொண்டாடினர்.
பள்ளிக்குழந்தைகள் மாடாட்டம், காவடியாட்டம் என கிராமத்து கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். குழந்தைகளுக்கான கோலம் வரையும் போட்டியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி செய்தித்தொடர்பாளர் வையாபுரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மதுரை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துச்செய்தி: மதுரை மத்திய சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் (திமுக) தொகுதி மக்கள் அனைவருக்கும் வாழ்த்துச்செய்தி அட்டையை அனுப்பியுள்ளார். அவரது வாழ்த்தை திமுகவினர் வீடு வீடாகச்சென்றும் விநியோகித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com