பொங்கல் பொருள்களை வாங்க அலைமோதிய மக்கள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கலிடுவதற்கான பொருள்களை வாங்க சனிக்கிழமை பொதுமக்கள் ஆர்வமுடன் கடைவீதிகளில் குவிந்ததால் மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கலிடுவதற்கான பொருள்களை வாங்க சனிக்கிழமை பொதுமக்கள் ஆர்வமுடன் கடைவீதிகளில் குவிந்ததால் மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
இதை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், கரும்பு, பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கொத்து மற்றும் பனங்கிழங்கு, பொங்கல் சிறப்பு உணவுக்கான காய்கறிகள் என அனைத்தையும் ஆர்வமுடன் வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
மதுரையில் பெரியார் பேருந்து நிலையம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், காளவாசல், அவனியாபுரம் என அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பொருள்கள் கடைகள் வைக்கப்பட்டிருந்தன. மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள காய்கறி சந்தை மற்றும் மலர்சந்தை, நெல் மண்டி பகுதி என அனைத்து இடங்களிலும் பொங்கல் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனர். வைகை யானைக்கல் பகுதியில் கரும்பு விற்பனை மிகவும் சிறப்பாக நடந்தது.
பத்து முதல் 12 கரும்புகள் அடங்கிய கட்டானது ரூ. 250 முதல் ரூ. 450 வரை விற்கப்பட்டது. தனி கரும்பானது ரூ. 25 முதல் ரூ. 50 வரை விற்கப்பட்டது. பூக்களும், பழங்களும் கூட அதிக விலைக்கு விற்பனையாகின.
மதுரையை சுற்றிய கிராமங்களில் விவசாயிகள் வயல்களில் தைத் திருநாளாம் முதல் நாளில் தும்பை, கண்ணுழிச்செடி சேர்த்து காப்புக்கட்டுவது வழக்கம். இந்த காப்புச் செடிகளை மதுரையில் வீடுகளிலும், வாகனங்களிலும் கட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆகவே காப்புச்செடிகளும் கட்டு ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்கப்பட்டன. அவற்றையும் ஏராளமானோர் வாங்கிச்சென்றனர்.
பொங்கல் திருநாளில் வீடுகள் முன்பு பெண்கள் கோலமிட்டு, அதில் அடுப்புக்கூட்டி பொங்கலிடுவது வழக்கம் என்பதால் கோலப்பொடி மற்றும் பலசரக்குக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
கடந்த ஆண்டைவிட மதுரையில் பொங்கலிட மண்பானையை அதிகமாக பெண்கள் வாங்கியதாக ஆரப்பாளையம் பகுதியில் மண்பாண்டம் விற்போர் கூறினர். பொங்கல் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் மதுரையில் அனைத்துப் பகுதிகளிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com