வாடிப்பட்டி அருகே பொங்கல் விழா: கரகாட்டம் ஆடி மகிழ்ந்த வெளிநாட்டவர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுநீரேத்தான் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் பொங்கல் கலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுநீரேத்தான் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் பொங்கல் கலை விழா நிகழ்ச்சியில் வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்று மேளம் கொட்டி, நாதஸ்வரம் வாசித்து, கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர். 
 தைத் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும்  மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகம் சார்பில் கிராமத்தில் வெளி நாட்டவருக்கான பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொங்கல் கலை விழாவானது வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுநீரேத்தானில் நடைபெற்றது.
 இவ்விழாவில் பங்கேற்பதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள சுற்றுலா துறை அலுவலகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பேருந்துகளில் மேட்டுநீரேத்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கார்களிலும் சுற்றுலாப் பயணிகள் கிராமத்துக்கு சென்றனர்.
 இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,  
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கியூனியா, மொரீசியஸ் உள்ளிட்ட 13 நாட்டு சுற்றுலாப் பயணிகள் மேட்டுநீரேத்தான் பொங்கல் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களை ஊர் எல்லையில் மேளதாளம் முழங்க, மாலை அணிவித்தும், குங்குமத் திலகமிட்டும் பொதுமக்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர்.
 கிராமத்தை தெருத்தெருவாகச் சென்று பார்வையிட்ட வெளிநாட்டுப் பயணிகள் அங்கிருந்த வீடுகளுக்குள்ளும் சென்று மக்களிடம் பேசி மகிழ்ந்தனர். பின்னர் ஊர் கலையரங்க பகுதியில் விறகு அடுப்புக்கூட்டி, பெண்கள் பொங்கல் சமைத்ததை ஆர்வமுடன் பார்வையிட்ட வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள், பொங்கலை கரண்டியைப் பிடித்து கிண்டி மகிழ்ந்தனர். பொங்கல் சாதம் பொங்கியதும், பெண்கள் குலவையிடுவதையும் ஆச்சரியத்துடன் வெளிநாட்டவர் பார்த்து அதைப் படம் பிடித்துக்கொண்டனர்.
 பொங்கல் நிகழ்ச்சி முடிந்ததும் பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம், மரக்கால், பொய்க்கால் குதிரை ஆட்டம், காளையாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை ரசித்துப் பார்த்தனர். 
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் மைக்கேல் மற்றும் ஜப்பானிய பயணிகள் கரகத்தை தலையில் வைத்து ஆடினர். மேளம் அடித்து, நாதஸ்வரத்தை வாசித்துப் பார்த்தனர். 
 வெளிநாட்டவரை உள்ளூர் இளைஞர்களும், பொதுமக்களும் உற்சாகப்படுத்தி கைதட்டி பாராட்டினர். வெளிநாட்டவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் சேர்ந்து ஆடி பாடினர்.
 வெளிநாட்டவர் பங்கேற்ற பொங்கல் விழாவில் மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன், உதவி அலுவலர் அன்பரசு, டிராவல்ஸ் கிளப் வாசுதேவன், செந்தில்நாதன், தானம் அறக்கட்டளை சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 ஜல்லிக்கட்டை பார்வையிடுவர்: மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை (ஜன.16) நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காணவும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச்செல்லப்படவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com