குழந்தைகளுக்கு ஆன்மிக கருத்துகளையும் நல்ல பழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும்: மாதா அமிர்தானந்த மயி 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்மிக கருத்துகளையும்,  நல்ல பழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும் என மாதா அமிர்தானந்த மயி கூறினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்மிக கருத்துகளையும்,  நல்ல பழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும் என மாதா அமிர்தானந்த மயி கூறினார்.  திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை மாதா அமிர்தானந்த மயி மடத்தில் பிரம்மஸ்தான ஆலய ஆண்டு விழாவையொட்டி வியாழக்கிழமை சத்சங்கம்,  பஜனை,  தியானம் மற்றும் தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாதா அமிர்தானந்த மயி  தமது ஆசியுரையில் கூறியது : 
  இன்று மனிதர்கள் மகிழ்ச்சி,  நிம்மதி  இல்லாத ஒரு உலகில் வாழ்ந்து வருகின்றனர்.  போருக்கான அச்சுறுத்தல்களும்,  பயங்கரவாதிகளின் தாக்குதல் பயமும்,  இயற்கை சுரண்டலுக்கும் குறைவில்லாமல் உள்ளது. அரசியல் பிரிவினைகளால் போராட்டமும், கலகமும் நடக்கின்றன. குடும்பங்களில்கூட போட்டியும்,  பொறாமையும் நிறைந்த சூழல் காணப்படுகிறது. யாருக்கும் யார் மீதும் உள்ளார்ந்த அன்பு இல்லை. முகமூடி அணிந்தவர் உலகில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
  பெரும்பாலானோருக்கு முகநூல்களில் அதிகளவில் நண்பர்கள் உள்ளனர். ஆனால், அனைவரும் தனிமையை உணருகிறார்கள். பரந்த மைதானத்தில் விளையாடிய காலம்போய் செல்லிடப்பேசி,  கணினியில் விளையாடும் நிலையில் உள்ளோம். 
   இன்று பெரியவர்கள் முதல் சிறு பிள்ளைகள் வரை சுயநலமும்,  வியாபார மனப்பான்மையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  இதனை மிகுந்த மனவருத்தத்துடன் கூறுகிறேன். இந்த நிலைக்கு காரணம் மனிதன் பணத்தின் பின்னால்  செல்வதுதான்.  உயிர் வாழ பணம் தேவை. அதேசமயத்தில் வாழ்க்கையே பணத்திற்காக என்று ஆகிவிடக்கூடாது. 
 தன்னலம் மிகுந்த சிந்தனைகளும், செயல்களும் செல்வத்தை பெற உதவக் கூடும். ஆனால்,  அது மனதில் உள்ள இருளை இருமடங்காக்கும்.  
  இன்று எண்ணற்ற இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமை களாகியுள்ளனர்.  இது இளைஞர்களின் வாழ்வை அழித்து வருகிறது.  இளைஞர்களுக்கு நல்ல நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். 
  பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு ஆன்மிக கருத்துகளையும்,  நல்ல பழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும். இதை செய்தால் குழந்தைகள் தவறான வழியில் செல்வதை தடுக்க முடியும். அன்றாடம் ஆன்மிகப் பயிற்சிக்கு என நேரம் ஒதுக்குங்கள். பூமித்தாயின் மார்பில் நாம் காயங்களை ஏற்படுத்தி விட்டுச் செல்பவர்களாக இருக்கக் கூடாது. மாறாக பூமித் தாயின் கூந்தலில் மலர்களை சூட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
   நிகழ்ச்சியில் ஏழைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வடக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்  வி.வி. ராஜன்செல்லப்பா,  மதுரை மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், அரசு வழக்குரைஞர் எம். ரமேஷ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com