அன்னை தெரசா மகளிர் பல்கலை. மாணவிகள் 11,014 பேருக்கு பட்டம்: ஆளுநர் வழங்கினார்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை பட்டங்களை வழங்கினார். மொத்தம் 11,014 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை பட்டங்களை வழங்கினார். மொத்தம் 11,014 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 
கொடைக்கானலில் உள்ள அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 26-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சி மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் மு.வ.அரங்கில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநரும் பல்கலைக் கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார். அவர் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அரங்கில் 291 பேருக்கு நேரில் பட்டங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 11,014 மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர்.
விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசியது: பெண்களாலே சமூகமும், நாடும் முன்னேற்றமடையும் என்பதை பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோர் விளக்கியுள்ளனர். அதன்படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் மேம்பாட்டுக்கான பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில்  உயர் கல்வி பயில்வோரில் பெண்கள் 24 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளனர். முனைவர் பட்ட ஆய்வில் ஆண்களை விட பெண்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் நம்மை மேம்படுத்தும் என்றார். 
பட்டமளிப்பு உரை: தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையர் ஷீலாப்பிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது:  
தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு மக்களின் அதிகாரம் கூடுதல் வலிமை பெற்றுள்ளது. தூய்மையான வெளிப்படையான நிர்வாகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுகிறது. 
அரசின் ரகசியம் காப்பது என்பதை விட மக்களுக்கான தகவல் அறியும் உரிமை முக்கியம் என்பதையும் இச்சட்டம் மூலம் செயல்படுத்திவருகின்றனர். 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு அரசுகளின் மீதான சமூகப் பார்வையே மாறுபட்டுள்ளது. 
கல்வியில் பட்டம் பெற்று சமூகத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கும் மாணவர்கள் சமூக மேம்பாட்டுக்காக பாடுபடுவது அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.வள்ளி வரவேற்றார். மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை, பதிவாளர் வீ.சின்னையா, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com