இருளில் மூழ்கிய திருப்பரங்குன்றம் தினசரி சந்தை: வியாபாரிகள் அவதி

திருப்பரங்குன்றத்தில் உள்ள தினசரி சந்தை, கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பின்றி, இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் உள்ள தினசரி சந்தை, கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பின்றி, இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மேலும் இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
 மதுரை மாநகராட்சி 95 ஆவது வார்டுக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சியின் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இங்கு சுமார் 156-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகள் உள்ளன. இந்த சந்தை மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.  தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்து செல்லும் இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பும் இல்லாமல் சந்தை இருளில் மூழ்கிக் கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சியினர் சந்தையில் மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 இதுகுறித்து மாநகராட்சி ஒப்பந்ததாரர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தினசரி சந்தையில் மாநகராட்சியினர் 156 கடைகள் இருப்பதாக தெரிவித்து அதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணம் பெறுகின்றனர். ஆனால், தற்போது 80 கடைகளே உள்ளன. அவர்களும் குறிப்பிட்ட அளவை விட விசாலமாக கடைகளை வைத்துள்ளனர்.
 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சந்தை நடைபெற வேண்டும். ஆனால், வியாபாரிகள் நள்ளிரவு வரை கடைகள் நடத்துகின்றனர். மேலும், இரவு நேரத்தில் பாதுகாப்புக்காக 7 மின் விளக்குகள் மட்டுமே பொருத்த அனுமதி உள்ளது.
 ஆனால், வியாபாரிகள் கடைதோறும் மின்விளக்கும் மற்றும் மின்விசிறியை வைத்து இரவு பகலாக உபயோகிக்கின்றனர். 
அதனால், மின்சாரக் கட்டணம் அதிகமாகி, அந்த கட்டணத்தை செலுத்த முடியாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் தான் தற்போது சந்தை இருளில் மூழ்கி கிடக்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com