பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேலூர் விவசாயிகள் எதிர்ப்பு- போராட்டம் நடத்த முடிவு

பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு  குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரும் புதிய திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என மேலூர் ஒரு

பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு  குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரும் புதிய திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என மேலூர் ஒரு போக சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும்  போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு வரும் குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் மூலம் குடிநீர் கொண்டு வர புதிய திட்டத்தை அரசு நிறைவேற்ற உள்ளது. இந்த திட்டத்துக்கு மேலூர் ஒருபோக சாகுபடி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேலூரில் ஒரு போக விவசாயிகள் சங்கத் தலைவர் மீ.முருகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 
 அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: 
  கடந்த மூன்று வருடங்களாக பெரியாறு அணையிலிருந்து விவசாயத்துக்கு போதிய தண்ணீர் வரவில்லை. நிலத்தடிநீர் வளம் மிகவும் குறைந்து வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகளை அரசு சிந்திக்கவில்லை. தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை பாதிப்பு, வன வளம் பாதிப்பு என பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீள  வாழ்வாதார ஏற்பாடுகளைஅரசு செய்யவில்லை. அதே சமயம் தற்போது இருக்கும் தண்ணீரையும் பறிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆந்திராவில் விவசாயத்துக்கு வேண்டிய தண்ணீரை கோதாவரி நதியை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். எனவே புதிய நீர் ஆதாரத்தை உருவாக்க திட்டம் வகுக்காமல், பாசன நீரை திருப்பிவிடுவதற்கு அதிகாரிகள் திட்டமிடுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளை அரசுக்கும் அமைச்சர்களுக்கும் எடுத்துரைக்கவும், மக்களிடம் பாதிப்புகளை விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 
கம்பம் முதல் சிவகங்கை மாவட்டம் வரை கிராமங்கள்தோறும் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும்.  மேலும் அறவழியில் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.  
  கூட்டத்தில் வெள்ளலூர் குறிஞ்சிகுமரன், கள்ளந்திரி அருள்பிரகாசம் மற்றும் பலர் பேசினர். ஒருபோகம் மற்றும் இருபோக சாகுபடி விவசாயிகள் ஏராளமானோர் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
குறைதீர் கூட்டம்: முன்னதாக மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேலூர் தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை  காலை நடைபெற்றது. 
  இக்கூட்டத்தில் விவசாயிகள் பலரும் கூறியது: இருபோகச் சாகுபடிப்பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டபின், வைகை பகுதியில் குடிநீராகத் திறந்துவிட்டதால், விளையும் தருணத்தில் நீரின்றி நெற்பயிர் கருகிவிட்டது. எனவே மேலூர் வட்டத்தையும் மதுரை கிழக்கு வட்டத்தையும் வறட்சிப் பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணம், பயிர் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுரை குடிநீர் திட்டத்துக்கு பெரியாறு அணையிலிருந்து லோயர்கேம்ப் வழியாக ரூ.200 கோடி செலவில் குழாய்ப்பாதை அமைக்கும் திட்டத்தை அரசு ரத்து செய்யவேண்டும் என்றனர். பல்வேறு விவசாய குழுக்களின் பிரதிநிதிகளும் விவசாயிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com