ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு: தூத்துக்குடி எஸ்பி-பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரும் மனுவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரும் மனுவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
     தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று, நிலத்தடி நீர் ஆகியவை கடுமையாக மாசடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
 இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ராஜாஜி பூங்காவில் மார்ச் 9 ஆம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். 
 இதற்காக கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம். ஆனால், சட்ட ஒழுங்குப் பிரச்னையைக் காரணமாகக் கூறி எங்கள் மனுவை மார்ச் 4 -ஆம் தேதி அவர் நிராகரித்தார்.
  இதனால் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்த இயலவில்லை. எனவே எங்களது மனுவைப் பரிசீலித்து ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
 மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு(மார்ச் 14) ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com