மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 45 நாள்களில் நிதி ஒதுக்கீடு: சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு இன்னும்  45 நாள்களில் அறிவிக்க உள்ளது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு இன்னும்  45 நாள்களில் அறிவிக்க உள்ளது என்று  தமிழக சுகாதாரத் துறைச் செயலர்  ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு விரைவில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
  மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா ரூ.150 கோடி செலவில்  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டுப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய முடிவடையும் கூடிய நிலையில் உள்ளதால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும். மதுரை சூப்பர்  ஸ்பெஷாலிட்டி பிரிவு நவம்பர் முதல் வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 எய்ம்ஸ் மருத்துவமனை...:   மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கான மண் பரிசோதனை, கட்டுமான வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டை விரைந்து அனுமதிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவரும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்துள்ளார். இன்னும் 45 நாள்களில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை  அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரரத்துறை தெரிவித்துள்ளது.
 பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை...:   ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.  தமிழகத்தில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்  பரவுவதை தடுக்க பொதுமக்கள் சுகாதாரத்தைப் பேண வேண்டும்.  மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராகிங் தொடர்பான விழிப்புணர்வை மருத்துவ மாணவர்களுக்கு ஏற்படுத்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் ராகிங் சம்பவத்தால் 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தண்டனை குறைப்பு தொடர்பாக கல்லூரி முதல்வர் தலைமையிலான குழு முடிவு செய்யும் என்றார்.
 மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மருத்துவக்கல்லூரி முதல்வர்  டி.மருதுபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com