தேவர் ஜயந்தி, மருதுபாண்டியர் குருபூஜைக்கு செல்பவர்களுக்கு 12 நிபந்தனைகள்: ஆட்சியர் தகவல்

மருதுபாண்டியர் குருபூஜை,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில்

மருதுபாண்டியர் குருபூஜை,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட 12 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அக்.27 இல் நடைபெற உள்ள மருதுபாண்டியர் குருபூஜை, அக்.30 இல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
 ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், தேவர் ஜயந்தி விழாவில்  கலந்து கொள்ள வாடகை வாகனத்தில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இரு சக்கர வாகனங்கள்,  டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வதும், நடைப் பயணமாகச் செல்வதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், தங்களது பகுதிக்கு உள்பட்ட டிஎஸ்பி அலுவலகங்களில் முன்அனுமதி பெற்று வரவேண்டும்.  ஒவ்வொரு காவல் மண்டலத்துக்கும் தனித்தனி காவல் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அதை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.
  இத்தகைய வாகனங்களில் வரும்போது, வாகன உரிமையாளர் வாகனத்தில் இருப்பது அவசியம். அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது. சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் கோஷங்களை எழுப்பக் கூடாது.
 வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில், வரையறுக்கப்பட்டுள்ள வழித் தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும்.  வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாகனத்தில் ஏற்றிச் செல்லக் கூடாது.
 மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஊர்வலம் செல்வோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலத்தை தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டும். பொதுக் கூட்டம் இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.
   மதுரையில் இருந்து பசும்பொன் செல்பவர்கள் சிலைமான், மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாகச் சென்று அதேவழியில் திரும்ப வேண்டும்.
 அதேபோல, மதுரையில் இருந்து காளையார்கோவில் செல்பவர்கள் சிவகங்கை வழியாகச் சென்று அதேவழியாகத் திரும்ப வேண்டும் என்றார்.
    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கே.எம்.பிரவீண்குமார் மற்றும் வருவாய், காவல் துறை அலுவலர்கள், அரசியக் கட்சி பிரதிநிதிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com