தேனி மாவட்டத்தில் மதுக்கடைகளை எதிர்த்து போராட்டம்: கூடலூரில் 240 பேர் கைது

தேனி மாவட்டத்தில் மதுக்கடைகளை எதிர்த்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் மதுக்கடைகளை எதிர்த்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
 இதில் கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 240 பேர் கைது செய்யப்பட்டனர். கூடலூர் பிரதான பஜாரில் இருந்த மதுக்கடையை கூடலூர்- சுருளி அருவி சாலையில் மயானச் சாலை பகுதியில் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் மதுக்கடை அமைக்கும் பணி தொடர்ந்தது.
 இதையடுத்து, கடந்த 6 ஆம் தேதி சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கூடலூர் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்கேயே சமைத்து உண்டதுடன், இரவு வரை காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் கடை திறக்கப்படாது என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை மயான சாலையில் மதுக்கடை திறக்கப்பட்டது. அப்போது அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தைத் தொடர்ந்து ஊழியர்கள் மதுக்கடையை மூடினர். பின்னர் பொதுமக்கள் பேரணியாக சென்று கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், தமிழக- கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டது, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட பொதுமக்கள் மறுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 130 ஆண்கள், 110 பெண்கள் உள்பட 240 பேரை கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கர்ணன் கைது செய்தார்.
உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை: ஆணைமலையன்பட்டியில் மாற்றியமைக்கப்பட்ட மதுக்கடை அங்குள்ள கல்லறைத் தோட்டம் முன் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 6 மணி நேர தொடர் போராட்டத்துக்குப் பின் அன்று மாலையே அக்கடை தாற்காலிகமாக மூடப்பட்டது.
 இதனை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 அப்போது துணை வட்டாட்சியர் முருகேசன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிரந்தரமாக மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் படியும், அதுவரையில் கடை திறக்கப்படாது எனவும் கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டம் காரணமாக 2 ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் இப்பகுதி மதுக்கடை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com