ஆடிப்பட்ட விதைப்புக்கு முன்வராத விவசாயிகள்: கிட்டங்கிகளில் விதைகள் தேக்கம்

தேனி மாவட்டத்தில் போதிய மழையின்றி ஆடிப்பட்ட விதைப்புக்கு விவசாயிகள் முன்வராததால், விவசாயத் துறை கிட்டங்கிகளில் விதைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தேனி மாவட்டத்தில் போதிய மழையின்றி ஆடிப்பட்ட விதைப்புக்கு விவசாயிகள் முன்வராததால், விவசாயத் துறை கிட்டங்கிகளில் விதைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.
மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் நிலத்தை பண்படுத்தி,ஆடிபட்ட விதைப்புக்கு தயாராவார்கள். இந்த ஆண்டு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தில் ஈரப்பதமின்றி விவசாயிகள் உழவு மற்றும் விதைப்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆடி 18-ஆம் பெருக்கு நாளன்று மழையை எதிர்பார்த்து,  ஆடிப்பட்ட விதைப்பை தொடங்க காத்திருந்த விவசாயிகள் மழையில்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால்,  இந்த ஆண்டு மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி கைவிடப்பட்டுள்ளது. நெல் சாகுபடி மற்றும் ஆடிப்பட்ட மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் முன்வராததால் விவசாயத் துறை கிட்டங்கி மற்றும் தனியார் உரக் கடைகளில் விதை மற்றும் உரங்கள் விற்பனையாகாமல் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 104 டன் விதை நெல்லில், இதுவரை மொத்தம் ஒரு டன் விதை நெல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4,250 டன் பயறு வகை பயிர் விதைகளில் 10 டன்னும், 15,400 டன் எண்ணெய்வித்துப் பயிர் விதைகளில் 1,250 டன்னும் விற்பனையாகியுள்ளன. 33,000 தென்னங்கன்றுகளில் 2,450 தென்னங்கன்றுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்று விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com