கேரள வாடல் நோய் தாக்குதல்: கம்பம் பள்ளத்தாக்கில் தென்னை மரங்கள் வெட்டி அழிப்பு

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தென்னையில் கேரள வாடல் நோய் பரவி வருவதால், அவற்றை விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தென்னையில் கேரள வாடல் நோய் பரவி வருவதால், அவற்றை விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றனர்.
  கம்பம் பள்ளத்தாக்கு கூடலூர், கம்பம், சுருளிப்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இப்பகுதியில் கேரள வாடல் நோய் பரவி வருவதால் தென்னை மட்டைகளில் அடிப்பகுதி பழுத்து மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இதனால் மகசூல் படிப்படியாக குறைந்து மரம் காய்ந்து விடுகிறது. இதற்கு ரசாயன மருந்துகள் தெளித்தாலும், அடி உரங்கள் வைத்தாலும் மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. இதனால், தென்னை விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  கூடலூர்- லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி தம்மனம்பட்டி, மந்த வாய்க்கால், சாமாண்டிபுரம் பகுதியில் கேரள வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றனர். வெட்டப்படும் மரங்களை மர அறுவை ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு எடுத்துச் செல்கின்றனர். இதே போல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரள வாடல் நோய் பாதிக்கப்பட்டதால் சென்னை, கொச்சி தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் தென்னை விவசாயிகளுக்கு புதிய மரக்கன்றுகளை வைக்க மானியமாக ஒரு மரத்திற்கு ரூ.250 வீதம் வழங்கி வந்தனர். ஆனால், தற்போது தென்னை மரங்களை வெட்டவும் புதிய தென்னை கன்றுகளுக்காகவும் தென்னை வளர்ச்சி வாரியம் மானியம் வழங்குவதில்லை. இதனால், தென்னை விவசாயிகள் அதிகளவில் நஷ்டம் அடைந்து வருகின்றனர். மேலும், கேரள வாடல் நோய் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நோயிலிருந்து காப்பாற்ற வேளாண் துறை அதிகாரிகள் அதிக அக்கறை காட்டவில்லையென்றும், மானியம் பெற்று தர முயற்சிக்க வில்லை எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com